வவுனியா நகரில், வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்கள் இரவு வேளைகளில் ஒளிர்வதில்லை. இதனால் இரவு வேளைகளில் அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளவேண்டியதுடன் திருடர்களின் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக பழைய பேருந்து நிலையத்தினை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் இருளில் மூழ்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. தற்போது மழையுடனான கால நிலை காரணமாக மாலை 6 மணியளவில் இருள் சூழ்ந்துகொள்கின்றது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா நகரிலிருந்து இரவு வேளைகளில் வியாபார நிலையங்களிலிருந்து வேலை முடிந்து செல்லும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள் எனப்பலருக்கு நகரில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் இரவு வேளைகளில் ஒளிர்வதில்லை இதனால் இரவில் செல்வதில் அச்சுறுத்தல் தமக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வருடம் முற்பகுதியில் வீதிகளில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது காலாவதியாகியுள்ளதுடன் அது ஒளிரவைக்க நடவடிக்கையும் நகரசபையினால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இரவு வேளைகளில் செல்லும் பயணிகளும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் புகையிரதத்தில் தூர இடங்களிலிருந்து வந்திறங்கும் பயணிகள் சிலரும் வீதி விளக்கு இரவு வேளைகளில் ஒளிராமை தொடர்பாக தெரிவித்துள்ளனர்.
இவ்வியடம் குறித்து பலரும் நகரசபையினருக்கு முறைப்பாடு மேற்கொள்ளச் சென்றபோது அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.





