வவுனியாவில் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம்!!

1002

அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதும் உறுதிமொழிகள் வழங்கப்படுவதும் பின்பு எந்த நடவடிக்கைகளுமின்றி தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

விரைவில் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் அறிவிப்பதும், தமிழ்த் தலமைகள் அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு ஆவன செய்வதாக கூறுவதும், நாங்கள் ஜனாதிபதியுடன் கதைத்து விட்டோம் எல்லாம் சரிவரும் என்று கூறுவதும் மீண்டும் கடந்த தினங்களில் மேடையேற்றப்பட்டு விட்டது.

இளைஞர்களாக கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் அரவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகிவிட்டார்கள். இன்றைய நல்லாட்சி அரசு இந்த 137 அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாலும் , விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

எனவே அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் அடையாள சத்தியாக்கிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (01.10.2018) காலை 7 மணிக்கு ஆரம்பமான இவ் அடையாள சத்தியாக்கிரகப் போராட்டமானது மாலை 5 மணிவரை முன்னெ டுக்கப்படவுள்ளது.

விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகனை விடுதலை செய், உண்ணாவிரதிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்று, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, ரத்துச் செய் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய், நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளும் மனிதர்களே, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யாதே என வாசகங்களை தாங்கிய பேனர்களும் கட்டவிடப்பட்டுள்ளன.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, ஸ்ரீ ரெலோ கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, புதிய மாக்சிச லெனினிச கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், அரசியல் கைதியின் உறவினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு பட்டியணிந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தனர்.