வவுனியா மகாறம்பைக்குளத்தில் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!!

1505

வவுனியா மகாறம்பைக்குளத்தில் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்கும் நோக்கோடு சரஸ்வதி முன்பள்ளியில் விளையாட்டு முற்றம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபை நிதியின் நிதியொதுக்கீட்டில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்நாதன் இதனை திறந்து வைத்திருந்தார். இதன்போது முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்விற்கு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் முன்னாள் முன்பள்ளி இணைப்பாளர் அருள்வேல்நாயகி மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர், இன்னும் இரண்டு அமர்வுகளுடன் மாகாணசபையின் காலம் நிறைவு பெறுகின்றது.

இக்காலப்பகுதியில் மாகாணசபையினால் நிதிகள் அனைத்தும் செலவிடப்பட்டுள்ளது. மாகாணசபைக்கு வந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிலர் கூறுவதாகும்.

எனினும் இன்னும் திறமையாக செய்திருக்கலாம் என்கின்ற கவலை இருக்கின்றது. அத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களை மாகாணசபை உள்ளீர்த்து அவர்களுக்கான வேதனத்தினை வழங்க முன்வரவேண்டும்

இரண்டு தடவைகள் இது தொடர்பாக சபையின் கவனத்திற்கு கோண்டு வந்திருக்கின்றேன். சுகாதார தொண்டர்களின் பிரச்சனை, பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கு அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அழுத்தமே காரணமாக அமைந்திருந்தது.

அதுபோல் முன்பள்ளி ஆசிரியர்களும் தங்களது கோரிக்கையை முன்னிறுத்தி மாகாணசபைக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.