வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தின் பணிகள் நேற்றும் நேற்று முந்தினமும் மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் பணிகளில் தடை ஏற்பட்டுள்ளது.
பெருமளவானோர் நீண்ட நேரம் காத்திருந்து தமது தேவைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இதனால் பலர் தூர இடங்களிலிருந்து சேவைகளைப் பெற சென்றவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குட்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வடபிராந்திய அலுவலகத்திற்கு நேற்றும் நேற்று முந்தினமும் சென்ற பலர் மின்சாரத்தடையினால் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்,
இதனால் பல தாமதங்கள் தடைகள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளதுடன், தூர இடங்களிலிருந்து சென்ற பலர் திரும்பிச் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அவசியத் தேவைகளினிமித்தம் குடிவரவு குடியகல்வுத்திணைக்களத்திற்குச் செல்லும் தமக்கு இலகுவான சேவையை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அலுவலகரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோது மின்சாரம் தடைப்பட்ட காரணத்தினால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தமது அலுவலகத்திற்கு மின்பிறப்பாக்கி இல்லாமையினால் மின்சாரம் தடைப்படும்போது இவ்வாறு சிரமத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும் கொழும்பு தலைமை அலுவலகத்திடம் இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மின்பிறப்பாக்கியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாதிருக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.






