வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி : வைத்தியராகி வறிய கிராமங்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம்!!

363

வைத்தியராகி வறிய கிராமங்களுக்கு சேவை செய்வதே எனது நோக்கம் என தேசிய ரீதியில் மூன்றாம் இடமும், மாவட்ட மட்டத்தில் முதலாம் இடமும் பெற்ற வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி பாலகுமார் ஹர்த்திக் ஹன்சுஜா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும், மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் வவுனியா சிவபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி பா.ஹர்த்திக் ஹன்சிகா பெற்றுள்ளார். இந்த வெற்றி குறித்து மாணவி தெரிவிக்கையில்,

வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளைப் பெற்றுள்ளேன். எனது பாடசாலை பின்தங்கிய கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலை. நான் இந்த நிலையை அடைய அப்பா, அம்மா, அதிபர், எனது பாடசாலை ஆசிரியர்களுமே காரணம்.

நான் காலையில் ஒவ்வொரு நாளும் ஒரு மணித்தியாலம் படிப்பேன். பாடசாலையில் தரும் வேலைகளை இரவில் செய்வதுடன், அதிக நேரம் படிப்பேன். நான் வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். வைத்தியராகி வறிய கிராமங்களுக்கு உதவி செய்வதே எனது நோக்கம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, 1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தரம் 5 வரை உள்ள நிலையில் 48 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 2012 ஆம் ஆண்டு ஒரு மாணவி புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில் இம்முறையே குறித்த பாடசாலை சாதனையை நிலைநாட்டியுள்ளது.