இலங்கை அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதற்கு கடும் எதிர்ப்பு..

876


kunoor

பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் வெலிங்டன் இராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் இராணுவ முகாம், இராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் திகதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திர ஹெட்டியராச்சி ஆகியோர் வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.



இராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைதாகினர். இந்நிலையில், முகாமிலுள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கான 10 மாத பயிற்சி திட்டமிட்டபடி துவங்கி றடைபெற்று வருகிறது. இதற்கு இடையூறு ஏற்படாத வகையில் வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.



இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மினி பஸ், அரசு பஸ், உள்ளூர் வாகனங்கள் மட்டும் தணிக்கைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன. வெளி மாவட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.