வரவு செலவுத் திட்டத்தின் எதிரொலியாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளன.
2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை கடந்த 21ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் யோசனைகளுக்கு அமைய பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
சீனி, கருவாடு, நெத்தலி, தோடம்பழம், மாசி பயறு உள்ளிட்ட பொருட்களுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான வரி உயர்த்தப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
சீனி ஒரு கிலோ 5 ருபாவினாலும், கருவாட்டு வகைகள் ஒரு கிலோ 27 ரூபாவினாலும், பயறு ஒரு கிலோ 2 ரூபாவினாலும், மாசி ஒரு கிலோ 27 ரூபாவினாலும், தோடம் பழம் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் மா வகைகளின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பால் மா உற்பத்திகளின் விலையை உயர்த்துமாறு ஐந்து நிறுவனங்கள், நுகர்வோர் அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
உலகச் சந்தையில் பால் மா உற்பத்திகளுக்கான விலை உயர்வடைந்துள்ளதாகவும் இதனால் இலங்கையிலும் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த நிறுவனங்கள் கோரியுள்ளன.
கடந்த கால விலைகள் தொடர்பிலான தகவல்களை நுகர்வோர் அதிகாரசபை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயங்களை கருத்திற் கொண்டு விலை ஏற்றம் குறித்து தீர்மானிக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.





