இலங்கையில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் தங்கம் கடத்திச் சென்ற 56 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கொச்சி விமான நிலையத்தில், அந்த விமானத்தில் வந்த 28 பெண்கள் மற்றும் 14 ஆண் பயணிகளிடம் நடத்திய சோதனையில் அவர்கள் மறைத்து கொண்டு வந்த மொத்தம் 10 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
அவர்களின் விசாவை பரிசோதித்ததில் அவர்கள் அடிக்கடி கொழும்புவில் இருந்து விமானத்தில் தென்னிந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு பயணித்தது தெரியவந்தது. ஒரே நாளில் அவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டு மீண்டும் திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்புவில் உள்ள ஒரு கும்பல் அவர்களை தங்கம் மற்றும் பொருட்களை கடத்தி செல்வதற்கு பயன்படுத்துவதும் விசாரணையில் தெரியவந்தது.
இதேவேளை, 1.733 கிலோ கிராம் தங்கத்துடன் 14 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.




