பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வீரேந்திர ஷேவாக். டெஸ்ட் போட்டிகளில் கூட ஒருநாள் மற்றும் T20 போட்டிகளை போன்றே பவுண்டரிகளை அடித்து வெளுத்துக் கட்டுவார்.
ஆனால் தற்போதோ ஒற்றை இலக்க ஓட்டங்களை எடுக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் இந்திய அணியில் இடமிழந்த ஷேவாக், அடுத்து தனது டெல்லி ரஞ்சி அணியிலிருந்தும் நீக்கப்படும் அபாயகரமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.
நடப்பு ரஞ்சி தொடரில் ஷேவாக் தொடர்ந்து சொதப்பலாக ஆடி வருகிறார். இதுவரை அவர் மொத்தம் 6 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ளார். இதில் ஒரு முறை கூட அவர் அரை சதம் போடவில்லை. மாறாக 1, 15, 9, 35, 3, 6 என்று சொதப்பலாகவே ஆடியுள்ளார்.
ஷேவாக்கின் திணறல் குறித்து டெல்லி அணியின் தலைமைத் தேர்வார் சேட்டன் சவுகான் கூறுகையில் ஷேவாக்கிடம் தற்போது நம்பிக்கை இல்லை என்பதே அவரது தடுமாற்றத்துக்கு காரணம்.
அவர் ஒரே ஒரு நல்ல ஸ்கோரை எடுத்து விட்டால் போதும் பழைய பார்முக்குத் திரும்பி விடுவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்றும் ஆட்டத்திலும் சரி, அவரது நுணுக்கங்களிலும் சரி எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதே கிரிக்கெட் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.





