வவுனியா குடியிருப்பு வீதி நீண்டகாலமாக திருத்தப்படவில்லை : மாணவர்கள் சிரமம்!!

770

வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லை இதனால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குடியிருப்பு பகுதியிலுள்ள இலங்கை தென்னிந்திய திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பூந்தோட்டம் மாணவர்கள் பலர் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர். இவ் வீதி நீண்டகாலமாகவே இவ்வாறு குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.

மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் முதல் வாகனச்சாரதிகள் அனைவரும் இவ்வீதியைத் திருத்தித்தருமாறு கோரியுள்ள நிலையிலும் இன்று வரையிலும் இவ்வீதி திருத்தப்படவில்லை.

100 மீற்றர் நீளமுடைய வீதியில் சில இடங்களில் பாரிய குண்டும் குழியும் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்கு பலர் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதும் இவ்வீதியூடாகவே. எனவே குறித்த வீதியைத்திருத்தி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.