அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் நிலவும் மோசமான காலநிலையால் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். கடும் சூறாவளி, பனிப்பொழிவு, மோசமான வானிலை காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
நியூமெக்ஸிகோ மாகாணத்தில் கிழக்குப் பகுதியில் நிலவிய பனிப்பொழிவு மற்றும் உறைபனி காரணமாக ஏற்பட்ட விபத்தில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. டெக்சாஸ் பகுதியில் சூறாவளியினால் நிகழ்ந்த வாகன விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியாவில் வியாழக்கிழமை கடும் புயலுடன் கனமழை பெய்தது. இதில் கார் மீது மரம் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் அவரது வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் பலியானார். புயலினால் துண்டிக்கப்பட்ட மின் கம்பி அருகே ஒரு சடலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
அரிசோனா மாகாணத்தில் மழை காரணமாக பள்ளிகளில் நடக்க இருந்த விளையாட்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. சாந்தா குருஸ் ஆற்றில் சடலம் ஒன்றை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
அரிசோனாவில் நடைபெற இருந்த கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. டெக்ஸாசில் மோசமான வானிலை காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.





