மூன்று இரவுகள் : 11 பேரின் மரணத்தால் திகில் பயத்தில் தவிக்கும் மக்கள்!!

307

டெல்லியில் 11 பேரின் தற்கொலையைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு அருகில் செல்லக்கூட அப்பகுதி பொதுமக்கள் பயந்து வருகின்றனர். முதலில் இவர்களின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

பின்னர், அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் அவர்கள் மூடநம்பிக்கையால் இறந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையைத் தொடங்கினர்.

இறந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை சடங்கு செய்யும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பிரேதபரிசோதனையின் முடிவில் தெரியவந்தது.

அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாகவும் யாரும் செல்லக் கூடாது என்பது போன்ற பல புரளிகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடு தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புரளிகள் உண்மையில்லை என்பதை நிரூபிக்க இறந்த நாராயணி தேவியின் மூத்த மகன் தினேஷ் சிங் தன் குடும்பத்தாருடன் புராரியில் உள்ள இல்லத்துக்குச் சென்று மூன்று இரவுகள் தங்கியுள்ளார்.

இது பற்றி கூறிய தினேஷ், நான் என் மனைவியுடன் மூன்று இரவுகள் அந்த வீட்டில் இருந்தேன். நாங்கள் இருந்த இந்த நாள்களில் அந்த வீட்டில் எந்த பயமும் உணரவில்லை. ஆனால், ஓர் அமைதியான சூழல் மட்டும் இருந்தது. அங்குள்ள பொருள்கள் இறந்தவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன.

அடுத்த வருடம் என் மகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்தவுடன் அவன் இங்கு வந்து தங்கவுள்ளான். அந்த வீட்டில் எங்களின் குடும்பத்தாரின் நினைவுகள் மட்டுமே உள்ளது பயம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.