உயிரிழந்த பெற்றோர் : தம்பியின் படிப்புக்காக அக்கா எடுத்த மனதை உருக்கும் முடிவு!!

638

தமிழகத்தில் பெற்றோர் இறந்ததால் ஆடிட்டர் கனவோடு கல்லூரி சென்ற பழங்குடியின மாணவி, படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காளிதிம்பம் கிராமம் அமைந்துள்ளது. 60க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான சாமிநாதன் – மாரம்மாள் தம்பதியினருக்கு சிவரஞ்சனி என்ற மகளும், ஹரிபிரசாந்த் என்ற மகனும் உள்ளனர். மாரம்மாள் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகள் இருவரையும் சாமிநாதன் கூலி வேலை செய்து படிக்க வைத்தார்.

சிவரஞ்சனி ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற கனவில் கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் சேர்ந்துள்ளார். ஹரிபிரசாந்த் தலமலை அரசு உண்டு உறைவிட பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சாமிநாதனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிவரஞ்சனி படிப்பை விட்டுவிட்டு தனது தந்தையை கவனிப்பதற்காக வந்துவிட்டார்.

ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் சாமிநாதனும் இறந்துவிட்டார். இதனால் நிர்கதியான சிவரஞ்சனி, தம்பியின் படிப்பு தொடர வேண்டி தன் படிப்பை பாதியில் கைவிட்டு தற்போது 100 நாள் வேலைக்குச் செல்கிறார்.

வறுமையும் ஆதரவின்மையும் தனது ஆடிட்டர் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகக் கூறும் சிவரஞ்சனி, கல்விக்கோ அல்லது வேலைக்கோ அரசு உதவி புரிய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.