வவுனியாவில் உழுந்து உற்பத்தியை அதிகரிக்க வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உழுந்து உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற நோக்கிலும் உள்ளுர் விவசாயிகளினூடாக உழுந்து உற்பத்தியை அதிகரிப்பதற்காக வவுனியாவில் உழுந்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உழுந்திற்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று விவசாய அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டமானது இலங்கையில் உழுந்து உற்பத்தியில் இரண்டாவது மாவட்டமாக திகழ்கிறது. சராசரியாக 18 ஆயிரம் ஏக்கர் உழுந்து வவுனியா மாவட்டத்தில் பயிர் செய்யப்படுகின்றது.
விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக 50 வீதம் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு உழுந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவை விசேட வலயமாக பிரகடனப்படுத்தி விவசாய திணைக்களத்தினால் தரமான 28 மில்லியன் ரூபா பெறுமதியான உழுந்து விதைகள் வவுனியா விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் 16 ஆயிரம் ஏக்கருக்கு தேவையான உழுந்து விதைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எட்டு கமநல சேவை திணைக்களங்கள் ஊடாக தரமான உழுந்து விதைகள் ரூபா 180 வீதம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.






