புதுமாப்பிள்ளை கொலையில் திடீர் திருப்பம் : பழிக்குப்பழி தீர்த்தது அம்பலம்!!

298

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணமான 5 மாதத்தில் விஜீஸ் என்பவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டார்.

பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் விஜீசின் நண்பர் நெல்சன் என்பவர் பொலிசாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தான் தான் விஜீசைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் தான் விஜீசுக்குத் திருமணம் நடந்துள்ளது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து கடத்திச் சென்று விஜீஸ் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி விஜீஸ், மதுபோதையில் மனைவியின் உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் விஜீசின் மனைவி, மாமியார் உள்ளிட்டோர் கோபித்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த விஜீசை பக்கத்து வீட்டு நண்பர் நெல்சன் மது அருந்த வரும்படி அழைத்துள்ளார். இருவரும் சிறிது துாரம் சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அந்த விரோதம் நெல்சன் மனதில் உறுத்திக்கொண்டே இருந்த காரணத்தால், அதுக்கு பழி தீர்த்துவிடலாம் என நெல்சன் முடிவு செய்துள்ளார்.

போதையில் இருந்த விஜீசின் கழுத்தை அறுத்து அங்கேயே புதருக்குள் போட்டு விட்டு வீட்டிற்குச் சென்று விட்டார். ஏற்கனவே காதல் திருமணம் தொடர்பான பிரச்னை விஜீசுக்கு இருந்ததால் அதன் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக ஒரு தோற்றம் ஏற்பட்டு விடும் என நெல்சன் நம்பியுள்ளார்.

ஆனால், பொலிசாரிடம் சிக்கியதையடுத்து நெல்சன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த பொலிசார்,, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.