வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர் சதீஸ் மற்றும் கரவெட்டிப் பிரதேசசபை தலைவர் பொன்னையா வியாகேசுவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர் சதீஸினுடைய வீட்டின் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் தனது வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து 10 நிமிடங்கள் தனது வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் மேற்கௌ்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் தாக்குதலை மேற்கெண்டு தனது வீட்டிலிருந்து சென்றதன் பின், படைத்தரப்பினரது வாகனம் தனது வீட்டைக் கடந்து சென்றதை தான் அவதானித்ததாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வல்வெட்டித்துறை நகரசபையின் மாதாந்த கூட்டம் இன்று இடம்பெறவுள்ள நிலையில் பெரும் அச்சத்தின் மத்தியில் தாம் உள்ளதாக நகரசபை உப தவிசாளர் சதீஸ் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கரவெட்டிப் பிரதேசசபை தலைவர் பொன்னையா வியாகேசுவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேன் மற்றும் மோட்டார் வண்டியில் வந்த நபர்கள் தன் வீட்டின் மீதும் தனது வாகனத்தின் மீதும் தாக்குதலை மேற்கொண்டதாக பொன்னையா வியாகேசு தெரிவித்தார்.
தாக்குதலின் காரணமாக தனது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் ஆறு உடைந்து தூளாகியுள்ளதாகவும் கப் வாகனத்தின் கண்ணாடிகளும் முற்று முழுதாக உடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சத்தம் கேட்டு தான் எழுந்து பார்த்தபொது நபர் ஒருவர் தனது வீட்டின் நுளைவாயில் ஊடாக உள்ளே பாய்ந்ததாகவும் அதன் பின்னதாக சரமாரியாக கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதேசசபை தலைவர் கூறினார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாளை மாவீரர் தினம் நினைவு கூர்வது வழமையாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அதன் தாக்கமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை நேற்றைய தினம் கரவெட்டி பிரதேசசபையில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தை பிரதேசசபை தலைவர் நிராகரித்தார்.
பிரதேசசபை உறுப்பினர்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அடையாளம் தெரியாத ஒருவர் அங்கு பூ வைத்து விளக்கேற்றியுள்ளதாகவும் அந்த சம்பவம் குறித்து தான் அறிந்திருக்கவில்லை எனவும் பிரதேசசபை தலைவர் கூறினார்.
எனவே இது பிரதேசசபையினூடாக மேற்கொள்ளப்பட்ட நிகழ்வல்ல என பிரதேசசபை தலைவர் பொன்னையா வியாகேசு மேலும் தெரிவித்தார்.





