சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது..
சிவாஜி கணேசன் தமிழ் திரையுலகின் அடையாளமாக திகழ்ந்தவர். வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தலைவர்களை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
பிரான்ஸ் அரசின் செவாலியே விருதையும், இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்தவர்.
சிறப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர். தமது சிறப்பான நடிப்பால் என்னைப் போன்ற ஏராளமான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தவர்.
இத்தனை பெருமைகளைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு செய்யும் வகையில் தான் அவரது உருவச் சிலை கடந்த 2006ஆம் ஆண்டில் அவரது நினைவு நாளான ஜூலை 21 ஆம் திகதி கடற்கரைச் சாலையில் திறந்து வைக்கப்பட்டது.
கடற்கரை சாலையில் சிவாஜி சிலை அமைக்கப்பட்ட பின்னர் கடந்த 7 ஆண்டுகளில் அப்பகுதியில் சொல்லிக் கொள்ளும்படி விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. அதை அகற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
சிவாஜி கணேசனை சிறப்பிக்கும் வகையில் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தமிழக மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகவே அமையும். எனவே, சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது..
தமிழ் கலை உலகம் தரணிக்குத் தந்த தவப்புதல்வனாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகத்திலேயே ஈடு இணையற்ற நடிகராவார். அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், “ஹாலிவுட் புகழ் நடிகரான மார்லன் பிராண்டோ சிவாஜி கணேசனைப் போல நடிக்க முயற்சி செய்யலாம்” என்றார்.
அறிவாசான் பெரியார் அவர்களால் “சிவாஜி” என்ற பட்டத்தைப் பெற்ற நடிகர் திலகத்தை எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தினார் பேரறிஞர் அண்ணா. கலைஞரின் கனல் தெரிக்கும் வசனங்களுக்கு தன் சிம்மக்குரலால் உயிர் தந்தவர் செவாலியே சிவாஜி ஆவார்.
கோடான கோடி தமிழர்கள் நெஞ்சில் புகழிடம் பெற்றுள்ள நடிகர் திலகத்தின் கீர்த்தி காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும்.
சிவாஜி சிலையை அகற்ற முனையும் தமிழக அரசுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அந்த முயற்சியை அடியோடு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.