மட்டக்களப்பு ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா மீது கடுமையான விமர்சனம்..

513

batti

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.

நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்லவிருக்கும் இவ்வேளையிலேயே இந்தியா மீது தமது அதிருப்தியையும் கவலையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா மற்றும் பா. அரியநேந்திரன் ஆகியோர் இந்திய உதவி வீட்டுத் திட்டம், அண்மையில் இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைகள் உட்பட மாவட்டத்தில் தற்போதைய நிலைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்திய வீட்டுத்திட்டம் எல்லைகளில் சிங்களக் குடியேற்றத்துக்கு வழி செய்கிறது

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவினால் அறிவிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் இடம்பெயராமல் தமது கிராமத்திலே வாழ்ந்த சிங்கள குடும்பங்களும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல எல்லைகளில் அத்து மீறிய சிங்களக் குடியேற்றத்திற்கும் இந்த வீட்டுத் திட்டம் உதவுவதாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் இங்கு கூறினார்.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடக்கிய குழுவினாலேயே பயனாளிகள் தெரிவு இடம்பெறும் என்ற உறுதி மொழியை இந்திய வழங்கியிருந்ததாக கூறும் அவர் தன்னைப் பொறுத்தவரை இந்தியாவின் செயற்பாடுகள் இரட்டை வேடமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் இந்தியா மீது கடும் விமர்சனங்களை முன் வைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

சீனாவுக்கு எதிராக இலங்கையைத் திருப்திப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்தியா மாத்திரம் வீடுகளை வழங்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளும் வீடுகளை வழங்கி வருகின்றன. எந்த வித அரசியல் தலையீடுகளுமின்றி பயனாளிகளுக்கு அவை வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் அதற்கு மாறாகவே உள்ளன. சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவு காரணமாக இலங்கையை திருப்திபடுத்தும் வகையிலேயே இந்தியா நடந்து கொள்கின்றது. இந்தியாவின் உறுதிப்பாடற்ற நிலை காரணமாகவே ராஜீவ் – ஜே. ஆர் ஒப்பந்தம் என கூறப்படும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தற்போது பாதுகாக்க முடியாமல் திண்டாடி கொண்டிருக்கின்றது என யோகேஸ்வரன் கூறினார்.

இது தான் சார்ந்த கட்சியின் கருத்து அல்ல என்றும் மக்களால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் வெளியிடப்பட்ட தனது கருத்து என்றும் அவர் கூறினார்.

அதே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தற்போது நடைமுறையிலுள்ள 13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் இலங்கை அரசு கொண்டுவரவுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் மூலம் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை நீக்குதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்தியவுடன் ஆராய்வதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி பயணமாகவுள்ள இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஆ.ம. சுமந்திரன், பொன். செல்வராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இடம்பெறுகின்றார்கள்.

புது டெல்லியிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில் செல்லும் இக்குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தரப்பு பேச்சுக்களில் கலந்து கொள்வார்கள் என தெரியவருகின்றது.

 

-BBC தமிழ் –