கொழும்பு உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு வெளியானது : ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு இடைக்காலத்தடை!!

254

நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனால் கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. அதே நேரம் நாடாளுமன்றமும் ஜனாதிபதியால் 16 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கு ரணில் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உரிமை கோரிவந்த நிலையில், மைத்திரி – மகிந்த தலைமையிலான புதிய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தது.

எனினும், நாடாளுமன்றை உடனடியாக கூட்டவேண்டும் என கோரிவந்த நிலையில், நாளைய தினம் (14ஆம் திகதி) கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாடாளுமற்றை கலைப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி வர்த்தமானி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றை கலைப்பதாக தெரிவித்து ஜனாதிபதி வெளியிட்டிருந்த வர்த்தாமானியை இரத்து செய்யுமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பொது அமைப்புகள் உயர் நீதிமன்றில் 17 மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந்த மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்களை கொண்ட குழு முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இது தொடர்பில் மேலும் கால அவகாசம் தேவையென சட்ட மா அதிபர் தெரிவித்ததையடுத்து மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று காலை மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றன. சட்டமாக அதிபர் தனது நிலைப்பாட்டை உயர் நீதிமன்றில் கூறியிருந்தார்.

குறிப்பாக நாடாளுமன்றை கலைப்பதாக ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் சரியென சட்டமா அதிபர் கூறியிருந்தார். வழக்கின் விசாரணைகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், இது குறித்த வழக்கு விசாரணைகளை அடுத்த மாதம் 18ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.