முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்ட படம்!!

276

nightஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி வரும் புதிய படம் நேர் எதிர். இப்படத்தை இயக்குனர், தயாரிப்பாளர் கேயாரிடம் 12 ஆண்டுகளாக பணியாற்றிய எம்.ஜெயபிரதீப் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தில் ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம்.எஸ்.பாஸ்கர், பார்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் தி மூவி ஹவுஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. முழுநீள சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதை முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கிறது. ஒரு காட்சிகூட பகலில் எடுக்கப்படவில்லை.

நேர் எதிர் என்பது வழக்கமான நாயகன், வில்லன் மோதலா என இயக்குனரிடம் கேட்டதற்கு அவர் கூறிய விளக்கம் வருமாறு..

உலகில் எல்லா விலங்குகளுக்கும் அதனதன் சுபாவத்தில் சரியாகவே இருக்கின்றன. சிங்கம் புல் தின்னாது. ஆனால் வேட்டையாடும். நாய் முனகாது, ஆனால் குரைக்கும். பூனை குரைக்காது, மியாவ் என்றே கத்தும், பாம்பு கொஞ்சாது, சீறவே செய்யும். ஆனால் மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.

ஒரு மனிதன் எப்போது புலி போல பதுங்குவான், எப்போது சிங்கம் போல வேட்டையாடுவான், எப்போது நரித்தனம் செய்வான், எப்போது பாம்பு போல விஷத்தை கக்குவான் என்று யாருக்குமே தெரியாது. எல்லா விலங்குகளின் குணத்தையும் தன்னுள்ளே கொண்டவனாக இருக்கிறான்.

ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு நேர் எதிர் ஆக அவன் இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை சுவராஸ்யப்படுத்தி உருவாக்கியுள்ள படம்தான் நேர் எதிர். படத்தில் வரும் 5 கதாபாத்திரங்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று புரியாதபடி காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை.

இன்றைய யதார்த்த உலகில் நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்குளம் போக்குகளுமே கதைப் பின்னணி. தற்காலச் சூழலில் தவறு எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை படம் பிடித்துக்காட்டும் கதை. காதல், நட்பு எல்லாம் இணைந்த சஸ்பென்ஸ் உடையது. அடுத்தது என்ன என்று ஊகிக்க, நம்ப முடியாத திருப்பங்களுடன் கதை பயணிக்கும் என்று கூறினார்.

இந்த படத்துக்காக ஏவி.எம்.ஸ்டுடியோவில் ஒரு பெரிய செட் போடப்பட்டு பெரும்பாலான காட்சிகள் அதில் படமாகியுள்ளன. மூன்று மாடிகள் கொண்ட இந்த செட் 75 லட்ச ரூபாய் செலவில் போடப்பட்டுள்ளது. ஏவி.எம். செட் தவிர சென்னையில் முக்கிய சாலைகள், ஹோட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களிலும் படமாகியுள்ளது.

படத்திற்கு சதீஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவர். ஏற்கெனவே கனிமொழி, லீலை ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அறிவுமதி, கமலக்கண்ணன் ஆகியோருடன் இயக்குனர் ஜெயபிரதீப்பும் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

கவிஞர் அறிவுமதியின் மகன் ராசாமதி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கெனவே சித்து+2 உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இப்படத்தைப் பார்த்த கலைப்புலி எஸ்.தாணு, அதன் நிறமும், தரமும் பிடித்துப்போகவே தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ் சார்பில் வாங்கி வெளியிடுகிறார்.