வவுனியாவில் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

523

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் தங்கள் பாடசாலைக்கும் அதிபருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று (16.11) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கு உணவிற்காக வழங்கப்பட்ட மீன் ரின் உணவுப் பொருளில் பாடசாலை அதிபர் ஊழல் செய்ததாக வெளியாகிய செய்தியை அடுத்து தமது பாடசாலைக்கும் அதிபருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பாடசாலையை அவமானப்படுத்தும் நாசகாரர்களே இன்றுடன் உங்கள் சேட்டையை நிறுத்துங்கள், இன்றுதான் ஆரம்பம் இது இப்படியே தொடர்ந்தால் ஏற்படும் பூகம்பம், கல்விக்கூடம் கற்பதற்கு மீன் சந்தையல்ல, கல்விக்காக பாடுபடும் ஆசான்களை முகவரியற்ற முகநூலே கேவலப்படுத்தாதே போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர்.

பாடசாலை மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்ட நிலையில் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போக்குவரத்து பொலிசார் வவுனியா பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்திருந்த வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பாடசாலை அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் பாடசாலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.