வவுனியாவில் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை : 34 ஆயிரம் ரூபா தண்டம்!!

313

வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள ஐந்து வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகரால் பரிசோதனை நடாத்தப்பட்டபோது பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது நீதிமன்றத்தினால் 34 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகரின் வழமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வர்த்தக நிலையங்களில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள், காலாவதியான உணவுப் பொருட்கள், வண்டு மொய்த்த உணவுத்தானியங்கள், பூஞ்சனம் பிடித்த கருவாடுகள், எலி வெட்டிய பிஸ்கட் பைகள் என்பன விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை அவதானித்து குறித்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக பொது சுகாதாரப் பரிசோதகரினால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய தினம் வழங்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை மேற்கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஐவருக்கும் எதிராக 34 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் மேலும் கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை அழித்துவிடுமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.