இலங்கை அரசாங்கத்திடமிருந்து பேஸ்புக் பயனர்களை பாதுகாத்து தருமாறு அவசர கோரிக்கை!!

552

முகநூல் நிறுவனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. சட்டவிரோத இலங்கை அரசாங்கத்திடமிருந்து பயனர்களை பாதுகாத்து தருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக, முகநூல் நிறுவனத்திடம் கோரியுள்ளது.

முகநூல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க்கிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையின் சட்டவிரோத அரசாங்கத்துடன் முகநூல் நிறுவனம் தொடர்புகளைப் பேணக்கூடாது என அவர் கோரியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலலான இலங்கை அரசாங்கம், சில முகநூல் பயனர்கள் பற்றிய விபரங்களை இரகசியமாக கோரக்கூடும் எனவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பயனர்களின் அந்தரங்க உரிமையை உறுதி செய்ய வேண்டியது முகநூல் நிறுவனத்தின் கடமையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அரசியல் அமைப்பிற்கு முரணான செயற்பாடுகளிலிருந்து இலங்கை முகநூல் பயனர்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தரப்புக்களும் அரசியல் அமைப்பிற்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வரும் நிலையில் அரசாங்கம் அதனை உதாசீனம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத அரசாங்கம் மரபு ரீதியான ஊடகங்களை கட்டுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிவில் சமூகத்துடன் ஊடாடக்கூடிய பிரதான கருவிகளில் ஒன்றாக தற்பொழுது இந்த சமூக ஊடகங்கள் அமையப் பெற்றுள்ளதாகவும், இந்த நிலையில் பயனர்கள் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை பதிவிடவும் பகிரவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதான அரசியல் கட்சி என்ற வகையில் நாட்டு மக்களின் நலனைக் கருத்திக் கொண்டு இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

தமது கட்சி ஜனநாயகத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் ஓர் கட்சி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இந்த அரசாங்கம் பயனர்கள் பற்றிய விபரங்களை கோரினால் அதனை நிராகரிக்குமாறும், பயனர்களின் அந்தரங்கத்தை உறுதி செய்யுமாறும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.