நீண்ட நாட்களின் பின்னர் நேரில் சந்தித்துக்கொண்ட ரணில் – மைத்திரி!!

290

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருந்தது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டார்.

அந்த இடத்திற்கு மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி நியமித்திருந்தார். இதனையடுத்து மகிந்த – ரணில் ஆகிய இருவரும் பிரதமர் பதவிக்கு உரிமை கோரிவந்த நிலையில், அண்மையில் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

இதன் போது புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் இரண்டு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், அதனை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, சற்று முன்னர் அனைத்து கட்சி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் கடந்த 26ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மற்றும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் ஆகியோர் நேரில் சந்தித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.