வவுனியா நகரசபையின் விழாவை புறக்கணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : நா.சேனாதிராஜாவின் அறிக்கைக்கு நகரபிதா பதில்!!

616

வவுனியா நகரசபை நடாத்தவுள்ள கலாசார விழாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கவுள்ளதாக நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா பத்திரிகைச் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்வறிக்கையில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதோடு, நகரசபை நடாத்தவுள்ள விழா தொடர்பாக எந்தவிதமான விளக்கமுமின்றி செய்தி வெளியிட்டுள்ளார் என வவுனியா நகரசபையின் நகரபிதா தேசபந்து.இ.கௌதமன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

வவுனியா நகரசபை வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பல்துறை சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றினை 02.12.2018 இல் நடாத்தவுள்ளது. இது ஒரு கலாசார விழாவல்ல. இது மூவின மக்களும் இணைந்து கொண்டாடும் பல்துறை சேவையாளர் விழாவாகும்.

வவுனியா நகரசபையில் ஏழு உறுப்பினர்கள் கொண்ட ஒரு கலாசார குழு உருவாக்கப்பட்டது. இதற்கு தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவராக த.பரதலிங்கம் தெரிவுசெய்ப்பட்டார். இன்னும் இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுமாக மூன்றுபேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் விழுமியங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதில் அதிக ஆர்வம் காட்டினேன். அதனால் நகரசபையில் உள்ள பதிவுசெய்யப்பட்ட கலை, இலக்கிய மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள் ஆகியவற்றை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினேன்.

இக் கலந்துரையாடல்களில் அவர்களின் செயற்பாடுகள், அவர்களின் தேவைகள் ஆகியவற்றை தெரிந்துகொண்டதோடு, மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் விழுமியங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது தொடர்பான ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டேன். பின்னர் இம்மன்றங்கள் அனைத்தையும் ஒன்றாகக் கூட்டினேன். இக்கூட்டத்தில் ஒவ்வொரு மன்றித்திலுமிருந்து ஒரு உறுப்பினர் தெரிவுசெய்யப்பட்டு ஒரு கலாசாரசபை உருவாக்கப்பட்டது.

இக்கலாசாரசபையில் நகரசபையின் கலாசார குழுவும் இணைக்கப்பட்டது. இக்கலாசார சபைக்கு ‘எழுநீ பண்பாட்டு முற்றம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இக் கலாசார சபைக்கு நகரபிதாவாகிய என்னால் ஒரு செயற்குழு தெரிவுசெய்யப்பட்டது.

இக் கலாசார சபையின் செயற்தலைவராக மூத்த கலைஞரும் உலகறிந்த பேச்சாளரும் வவுனியா தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகருமாகிய தமிழருவி சிவகுமாரன் தெரிவு செய்யப்பட்டார்.

மூத்த கலைஞரும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டளரும், ஆறு நூல்களை எழுதி வெளியிட்டவருமான கலாபூசணம் தமிழ்மணி மேழிக்குமரன் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். பல்துறை சார்ந்த செயற்பாட்டாளர்கள் பதினொருபேர் இச் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவில் திரு.அகளங்கன், திரு.அருணா செல்லத்துரை ஆகிய இருவரும் உள்ளவாங்கப்படவில்லை என சேனாதிராசா தெரிவித்துள்ளார். அகளங்கனுக்கு கடிதம் அனுப்பியும் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. அருணா செல்லத்துரை எந்த பதிவு செய்யப்பட்ட கலை இலக்கிய மன்றத்தில் உள்ளார் என்பதனை சேனாதிராசா அவர்கள் தெரிவிப்பது நல்லது.

உள்ளுராட்சி சபைகளின் உப விதிகளுக்கு அமைய நகரசபைக்குட்பட்ட பிரஜைகளை கொண்டு இக் கலாசாரசபை உருவாக்கப்பட்டது. இது தொடர்பான விளக்கத்தினை நகரசபை உறுப்பினர் என்ற வகையில் சேனாதிராஜா அவர்கள் உபவிதிகளை படித்துத் தெரிந்து கொள்வது நல்லது.

எழுநீ பண்பாட்டு முற்றம் வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பல்துறை சேவையாளர்களை கௌரவிப்பது என செயற்குழு தீர்மானித்தது. சேவையாளர்களை யாராவது விருதுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என பத்திரிகைகள், இணையத்தளங்கள், முகநூல்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டது.

250க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றன. இதிலிருந்து சேவையாளர்களை தெரிவு செய்ய ஏழுபேர் கொண்ட தெரிவுக்குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டது. இத் தெரிவுக்குழுவில் நகரசபை கலாசார குழுவின் தலைவரும் கூட்டமைப்பின் உறுப்பினருமான பரதலிங்கமும் தெரிவு செய்யப்பட்டார்.

இக்குழு 125க்கு மேற்பட்ட சேவையாளர்களை தெரிவுசெய்தது. இவர்களில் 70வீதமானவர்கள் மூத்தகலைஞர்கள், சேவையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிந்துரை செய்யப்பட்ட சேவையாளர்களில் பலர் சேவையாளர்களுக்கு விருதுகொடுத்து மதிப்பளிக்கும் கௌரவம் உள்ளவர்கள் என்ற பட்டியலை தெரிவுக்குழு பரிந்துரைத்தது. அவர்களில் திரு.அகளங்கன், திரு.அருணா செல்லத்துரை ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களை சேவையாளர்களுக்கு மதிப்பளிக்க வருமாறு எமது கலாசார செயற்குழுவினர் சென்று வினயமாக கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் சேனாதிராசா அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் மாவட்டச் செயலாளர் கலந்து கொண்டார் எனக்குறிப்பிட்டு அரசியல் கலந்துவிட்டது எனக் கூறுவது பொருத்தமற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினருக்கு இருக்கும் அதே அரசியல் உரிமை ஈ.பி.ஆர்.எல்.எவ். மாவட்டச் செயலாளருக்கும் உண்டு என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உள்ளுராட்சி சபைகளில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று எதுவும் கிடையாது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் கருத்து தெரிவித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

தம்பி அகளங்கனை புறக்கணிக்கிறார்கள். அவருக்கு விருது கொடுக்கும் தகுதி நகரசபைக்கு இல்லை என சேனாதிராசா சொல்கிறார். அண்ணன் சேனாதிராசா ஒரு நல்ல எதிர்க்கட்சி தலைவர் இல்லை என அகளங்கன் கூறுகின்றார். இக் குடும்பத் தகராறை தீர்ப்பது நகரசபையின் வேலை அல்ல.

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை விழாவுக்கு பிரதம விருந்தினராக அழைப்பது என என்னால் முன்வைக்கப்பட்ட ஆலோசனை செயற்குழுவில் முன்வைக்கப்பட்டது.

உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக முதல்வராக உள்ளுராட்சி அமைச்சரான முதலமைச்சரே இருந்தார். அவருடன் கடந்த ஏழுமாதங்களாக நான் கடமையாற்றியுள்ளேன். அந்தவகையில் அவருக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே அவரை பிரதமவிருந்தினராக அழைக்கும் ஆலோசனையை முன்வைத்தேன். செயற்குழுவில் இருந்த த.பரதலிங்கம் உட்பட்ட மூன்று கூட்டமைப்பு உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் தாம் எதிர்க்கட்சி என்று கூறுவதால் எதைச் சொன்னாலும் எதிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றே எண்ணத் தோற்றுகிறது.

விக்கினேஸ்வரன் அவர்களை அழைப்பது தொடர்பான ஆரோக்கியமான காரணங்களை செயற்குழு உறுப்பினர்கள் பலர் எடுத்துக் கூறியும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அதனால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

பதினெட்டு செயற்குழு உறுப்பினர்களில் இவர்கள் மூன்றுபேரை தவிர ஏனைய பதினைந்து பேரும் விக்கினேஸ்வரனை பிரதமவிருந்தினராக அழைக்க வேண்டும் என வாக்களித்தனர். அதன்பிரகாரம் விக்கினேஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராக எமது விழாவில் கலந்து கொள்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சேனாதிராசா போன்றவர்கள் சமூகமேம்பாட்டுக்கு எதிரானவர்கள் என்பதனை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும் என நகரபிதா தெரிவித்துள்ளார்.