வவுனியாவில் கலாச்சார நிகழ்விற்கு விக்னேஸ்வரன் வருகை : கறுப்புக்கொடி போராட்டம் நடாத்த திட்டம்!!

759

வவுனியா நகரசபை கலாச்சாரக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் கலாச்சார விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2ஆம் திகதி நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நிகழ்விற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தற்போது அரசியல் கட்சியின் தலைவராகவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வதற்கு வந்தால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடிப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வவுனியா நகரசபையினால் நடாத்தப்படவுள்ள குறித்த விருதுவழங்கும் விழாவில் பல மூத்த கலைஞர்கள் படைப்பாளிகள், புறக்கணிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஒழுங்குபடுத்தியவர்களினால் சில முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்நிகழ்வு இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்து பல தரப்பட்டவர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்நிகழ்விற்கு முன்னாள் வடமாகாண முதலமைச்சர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து வவுனியாவில் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த சில தரப்புக்கள் சில நகரசபை உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் திரைமறைவில் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக கடமையாற்றியபோது பழைய பேருந்து நிலையத்தின் செயற்பாடுகளை சரியான அணுகுமுறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் பல வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பழைய பேருந்து நிலையத்திலிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் முதலமைச்சரின் நடவடிக்கையினால் மூடப்பட்டுள்ளதாக இத் தரப்புக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மதகுவைத்தகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்கும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் இதனால் பலர் வேலையிழந்தும் தொழிலின்றியும் நிர்க்கதியான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளதுடன் முன்னாள் வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.