வவுனியாவில் நடைபெறவுள்ள மாவட்டங்களுக்கு இடையிலான கபடி போட்டி குறித்து மாவட்ட கபடி சங்கம் விசனம்!!

585

முறையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சங்கத்துடன் இணைந்து மாவட்டங்களுக்கிடையில் நடைபெறவுள்ள கபடிச் சுற்றுப் போட்டி குறித்து வவுனியா மாவட்ட கபடி சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வவுனியா மாவட்ட கபடிச் சங்க உபதலைவர் ஜே.ஏ.டீ.லலித் ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்ட கபடிச் சங்கமானது இம் மாவட்டத்தில் உள்ள மூவின மக்களையும் உள்வாங்கி மாவட்டத்திலும், இலங்கை கபடிச் சங்கத்திலும் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக தொழிற்பட்டு வருவதுடன், பல கபடி செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் வரை இலங்கை கபடிச் சங்கத்துடன் தொடர்புகளையும் பேணிவந்துள்ளது.

இந்நிலையில் கண்டியைச் சேர்ந்த ஏ.சீ.ரட்நாயக்க என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஓருவர் தனக்கு சார்பான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரை இணைத்து புதிய கபடிச் சங்கம் ஓன்றை மாவட்டத்தில் உருவாக்கி மோசடியான வகையில் இலங்கை கபடிச் சங்கத்துடன் இணைத்துள்ளார்.

எதிர்வரும் 24,25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் இலங்கை கபடிச் சங்கத்தின் அனுசரணையில் மாவட்ட மட்ட ஆண், பெண் அணிகள் பங்கு பற்றும் கபடிப் போட்டி ஓன்றினை நடத்தவும் ஏற்பாடுகளை புதிய சங்கம் செய்துள்ளது.

மாவட்ட மட்ட கபடிச் சங்கத்தை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் இச் செயற்பாட்டால் கபடி விளையாட்டு வீரர்கள் பலரும் பாதிப்படைத்துள்ளனர். இச் செயற்பாடு குறித்து வவுனியா மாவட்ட கபடிச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.