விலகியவர்களிற்கு மைத்திரி விதித்துள்ள காலக்கெடு!!

847

மைத்திரி விதித்துள்ள காலக்கெடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய கட்சிகளில் இணைந்து கொண்டவர்களை உடனடியாக மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்ள காலகெடுவுடன் அறிவிப்பு ஒன்றை விடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்த உத்தேசிக்கவில்லை என அறிவிக்குமாறும் காலகெடுவுக்குள் கட்சியில் மீண்டும் இணையாதவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் கட்சியில் இருந்து தாமாகவே விலகிக்கொண்டார்கள் என கருதப்படும் என அறிவுறுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என கிடைத்து வரும் முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, துமிந்த திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, ஜோன் செனவிரத்ன, தயாசிறி ஜயசேகர உட்பட பல சிரேஷ்ட உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக கட்சியினருக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் தொந்தரவுகள் சம்பந்தமான ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனிடையே அரச நிறுவனங்களில் ராஜபக்ச ஆதரவாளர்கள் நியமிக்கப்படுவதை தடுக்கும் வகையில் ஜனாதிபதி சிறிசேன சுற்று நிரூபம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதற்கு அமைய ராஜபக்ச ஆதரவாளர்களான லக்ஷ்மன் ஹூலுகல்ல, நாலக கொடஹேவா, கபில சந்திசேன உட்பட சிலர் நியமனங்களை ஜனாதிபதி இரத்துச் செய்துள்ளார்.

-தமிழ்வின்-