வவுனியா பாடசாலைகளில் கருத்தோவிய நிகழ்வால் பரீட்சைகள் பாதிப்பு : பெற்றோர்கள் விசனம்!!

588

குழு எழு நீ பண்பாட்டு முற்றம்

வவுனியா பாடசாலைகளில் கடந்த சில தினங்களாக நகரசபையினரின் கலாச்சாரக் “குழு எழு நீ பண்பாட்டு முற்றம்” வழங்குகின்ற எழு நீ விருது 2018 தொடர்பான பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு கருத்தோவிய நிகழ்வுகளை பாடசாலைகளுக்குச் சென்று நடாத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் பாடசாலையிலும் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்விற்கு வவுனியா நகர பிதா இ. கௌதமன் தலைமையேற்று வருகின்றார்.

தற்போது மூன்றாம் தவணை பரீட்சைகள் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாறான நிகழ்வுகளை பாடசாலைகளில் நடாத்தி மாணவர்களின் பரீட்சைக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றதாக பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் நகரசபையின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கல்விச் சமூகத்தினர் இவ்வாறான பரீட்சை நேரங்களில் பாடசாலைக்கு அனுமதிப்பதை நிறுத்தி மாணவர்களின் பரீட்சை நடவடிக்கையில் கவனம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றனர். இவ்வியடம் குறித்து பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பாடசாலைகளில் வருட இறுதி மூன்றாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் நகரசபையினரின் கலாச்சாரக் குழுவினரின் பாடசாலை தோறும் கருத்தோவிய நிகழ்வுகளை நடாத்தி மாணவர்களின் பரீட்சை நடவடிக்கைக்கு இடையூறுகளை ஏற்படுத்திவருவதுடன் மாணவர்களின் கவனம் சிதைவடையும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே இவ்வாறான நடவடிக்கையினை பாடசாலைகளில் மேற்கொள்வதால் மாணவர்கள் பரீட்சையில் கவனமின்றி மனநிலையில் பாதிப்பு ஏற்படுத்தப்படுவதுடன் பரீட்சைகளை மேற்கொள்வதில் மாணவர்கள் சிக்கல் நிலையினையும் எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே இவ்வாறான நிலைமைகளை பாடசாலைகளில் மேற்கொள்வதை உடனடியாக தடை செய்வதுடன் பாடசாலை அதிபர்கள் கவனம் எடுத்து மாணவர்களை பரீட்சைக்குத் தோற்ற நல்ல மனநிலையினை ஏற்படுத்தப்படவேண்டும் அத்துடன் வவுனியா தெற்கு கல்வி வலயத்தினர் இந்நடவடிக்கையினை நிறுத்தி மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தித்தரவேண்டும் என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு உயரிய சபையான நகரசபையில் உறுப்பினர்களிடம் அனுமதி பெறப்படாது இவ்வாறான நிகழ்வுகளை பாடசாலைகளில் அதுவும் பரீட்சை நேரம் மேற்கொள்வது உறுப்பினர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.