கொலை செய்த மகன்
ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ், காசல்ரீ ஜனபதய பகுதியில் தந்தையை கொலை செய்த மகனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மன நோயாளியான மகன் ஒருவருக்கும் தந்தைக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போதே தந்தையை மகன் பொல்லால் அடித்து கொலை செய்துள்ளார் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இதில் உயிரிழந்த நபர் 74 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு மன நோயாளியான மகன் தினமும் சண்டையிடுவதாகவும் நேற்று இரவிலிருந்து சண்டை உக்கிரமடைந்த நிலையிலேயே, இக்கொலை நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் தற்போது டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதுடைய மகனை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இவரை இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இக்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.









