பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இடம்பெற்ற தீவிபத்துக்கு சதிவேலைகள் எதுவும் காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் தயாரித்த அடுப்பில் இருந்து வந்த பெற்றோல் கசிவினாலேயே தீவிபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த அடுப்பு 24 வயது இளைஞர் ஒருவரால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த பெற்றோல் அடுப்பில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களில் ஏற்பட்ட எரிபொருள் கசிவினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இம்மாதம் நடைபெற்ற பொதுநலவாய மாநட்டினை முன்னிட்டு அமைக்கப்பட்ட சர்வதேச ஊடகங்களுக்கான நிலையத்திலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டதாக வந்த தகவலையும் அஜித் ரோஹன மறுத்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் கண்காட்சி ஒன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடத்தில் இன்று (30) காலை தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.