வவுனியா நகரசபையின் எழு நீ நிகழ்விற்கு விக்னேஸ்வரனை அழைப்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பு!!

912

வவுனியா நகரத்தின் மத்திய கேந்திர பேருந்து நிலையத்தை சரியான முறையில் கையாண்டு முடிவுகளை எடுத்து செயற்படுத்த தவறியதையடுத்து வவுனியா நகருக்கு வரவேண்டிய ஒரு கோடி ரூபாவை நகரசபை இழந்துள்ளதுடன் பலநூறு பேருக்கு வேலைவாய்ப்புக்களும் இழக்கப்பட்டுள்ளதுடன் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இவற்றுக்கு காரணமான முன்னாள் வடமாகாண முதலமைச்சரை எவ்வாறு அழைத்து எழு நீ நிகழ்வை நடாத்துவது?

இவ்வாறு நேற்று இடம்பெற்ற நகரசபையின் 8ஆவது சபை அமர்வில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் செந்தில் ரூபன் இவ்வாறு கேள்வியை எழுப்பியதுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்நிகழ்வை புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார். சபை உறுப்பினர்களைவிட தலைவரின் தன்னிச்சையான முடிவால் 13பேர் வெளியில் இருந்து குழுவிற்கு தெரிவுசெய்யபட்டுள்ளனர்.

அவர்களது விபரங்கள் சபைக்கு முன்வைக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் அது நடைபெறவில்லை. இது தொடர்பான கலந்துரையாடல், கூட்டங்களிற்கு சரியானமுறையில் அழைப்பு விடுக்கபடவில்லை.

நகரசபையின் பெயரைபயன்படுத்தி நிகழ்விற்கான நிதி சேகரிக்கபட்டுள்ளது. மூத்த முக்கியமான கலைஞர்கள் புறக்கணிக்கபட்டுள்ளனர். ஈபிஆர்எல் எவ், ஈரோஸ் போன்ற கட்சிகளிற்கு ஆலோசனைக்குழுவில் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனை முதன்மை விருந்தினராக கொண்டு வந்திருப்பது, அரசியல் நோக்கத்துடனேயே என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம். எனவே அரசியல் நோக்கமுள்ள சட்டரீதியற்ற நிகழ்வை நாங்கள் புறக்கணிக்கின்றோம்.

இந்நிலையில் அவரை அழைப்பது அரசியல் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. வவுனியாவிலுள்ள பல அரசியல் கட்சி சாராதவர்களின் பெயர்களை பரிந்துரைத்திருந்தோம். ஆனால் அவர்களில் எவரையும் பிரதம விருந்தினராக பெயர் குறிப்பிடவில்லை. முன்னாள் முதலமைச்சரை பிரதம விருந்தினராக அழைப்பது தொடர்பாக சபையின் விவாதிக்கப்படவில்லை.

இந்நிலையில் எவ்விதமான முன்மொழிவுகளையும் சபையில் பெறப்படாமல் அழைப்பதையே நாம் எதிர்க்கின்றோம். எனவே அரசியல் சாராத ஒருவரை அழைத்து நிகழ்வை செயற்படுத்துவதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நகரசபைத்தலைவர் கருத்துத் தெரிவிக்கும்போது, எழு நீ நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது இது தொடர்பாக அனைத்து விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே இவ்வாறான ஒரு நிகழ்வு தேவையற்றது என்று தெரிவித்திருக்க வேண்டும். சில தினங்களில் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தற்போது பிரதம விருந்தினரை மாற்றுவது என்பது சாத்தியமற்ற விடயமாகவே காணப்படுகின்றது. ஒருவரை அழைத்துவிட்டு தற்போது நீங்கள் வரவேண்டாம் என்று தெரிவிக்க முடியாது என்று மேலும் தெரிவித்தார்.