அன்று பிலிப்பைன்ஸில் மருத்துவம் : இன்று வீதியில் இட்லி விற்கும் பரிதாபம் : ஒரு மாணவியின் கண்ணீர்!!

438

 

மாணவியின் கண்ணீர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவி குடும்ப வறுமையின் காரணமாக படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு தெருவில் இட்லி விற்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர், பிரதான சாலையில் வசிப்பவர் பழனிசாமி (48). இவர் சைக்கிளில் தெரு தெருவாக சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வனிதா (43) என்ற மனைவியும். கிருபா (21), கவுசல்யா (19), கவுரி (17) என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.

இவரது மூத்த மகள் கிருபா 2015ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 980 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவருக்கு படிக்க ஆசைப்பட்ட தனது மகளின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய பழனிச்சாமி சொத்தை விற்று வைத்திருந்த பணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க 5 லட்சம் பணத்தை கட்டி கிருபாவை சேர்த்தனர்.

முதலாம் ஆண்டு படிப்பை புனேவில் முடித்த கிருபா 2ம் ஆண்டு படிப்பினை பிலிப்பைன்ஸ்சில் தொடர்ந்தார். ஆண்டுக்கு 3 லட்சம் மருத்துவ கல்வி கட்டணமும், மாதம் 15 ஆயிரம் ஹாஸ்டல் கட்டணமும் செலுத்த வேண்டும். இவற்றை 2 ஆண்டுகள் மட்டும் கிருபாவின் தந்தையால் கட்ட முடிந்தது.

3 ஆம் ஆண்டு படிப்பினை தொடர்வதற்கு பணம் இல்லை. இதனால், மனமுடைந்த கிருபா தனது தந்தைக்கு தொல்லை கொடுக்க விரும்பாமல் மருத்துவ படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை திரும்பினார்.

இந்நிலையில், தற்போது கிருபா தனது தாயார் வனிதாவுக்கு துணையாக பழவந்தாங்கலில் ஒரு பள்ளக்கூடம் எதிரில் உள்ள பிளாட்பாரத்தில் தள்ளுவண்டி கடையில் இட்லி தோசை விற்கும் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவ மாணவி கிருபா கூறியதாவது, முதலில் மருத்துவருக்கு படிக்க ஆசைப்பட்டது எனது மிகப்பெரிய தவறு. சேலத்தில் ஒழுங்காக மளிகை கடை நடத்தி சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த எங்கள் பெற்றோர் எனது விருப்பத்திற்காக தொழிலை விட்டு, சொத்தை விற்று சென்னைக்கு வந்தோம்.

இப்போது தனது தந்தை தெருதெருவாக சைக்கிளில் டீ விற்று வருகிறார். தாயார் தள்ளு வண்டியில் டிபன் விற்கிறார். என்னால் தான் இந்த நிலைக்கு அவர்கள் வந்ததால் தற்போது அவர்களுக்கு உதவியாக தள்ளுவண்டிக்கடையில் வேலைசெய்து வருகிறேன்.

மருத்துவர் படிப்பை தொடர வேண்டுமே என்ற ஆசை உள்மனதில் இருந்தாலும் எங்கள் குடும்ப நிலையை நினைத்து அவர்களுக்கு உதவியாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனது தந்தை தாயாரும் நானும் என்னதான் உழைத்தாலும் வரும் வருமானம் வாடகைக்கும் சாப்பாடு மற்றும் கரன்ட் பில்லுக்குமே சரியாக உள்ளது என கண்கலங்கியபடி கூறியுள்ளார்.