வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மீளத்திறக்க வர்த்தக சங்கம் நடவடிக்கை!!

1053

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு சகல பேருந்துகளும் வந்து தமது சேவைகளை மேற்கொள்வதற்கு வடமாகாண ஆளுனருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து வர்த்தகர் சங்கத்தலைவர் மேலும் தெரிவிக்கும்போது,

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் உள்ளுர், வெளியூர் பேருந்து சேவைகள் இடம்பெறாமையால் வர்த்தகர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதற்கு சுமூகமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறு பொது அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச்சங்கம், பாடசாலைச் சமூகத்தினர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தனர்.

இக்கோரிக்கைக்கு அமைவாகவும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் வவுனியா வர்த்தகர் சங்கத்தின் முயற்சியினால் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்தினூடாக வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு சகல பேருந்துகள் வந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கடந்த 24.11.2018 அன்று வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம்.

இதன்போது வவுனியா பேருந்து நிலையத்திலுள்ள நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சர் தொலைபேசியூடாக வடமாகாண ஆளுனருடன் தொடர்பினை ஏற்படுத்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை 03.12.2018 வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுனர் ஆகிய முற்தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு சுமூகமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.