வடமாகாணத்தில் மிகக் குறைந்த வயதில் யூடோ போட்டியில் வெற்றிபெற்ற மாணவன் கௌரவிப்பு!!

883

வடக்கு மாகாணத்தில் மிகக்குறைந்த வயதில் யூடோ தரங்கணிப்பு போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவன் ஆர்.கே. கெவின் வயது (10) வவுனியாவில் கௌரவிக்கப்பட்டார்.

வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புக்கலை அமைப்பின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண ரீதியில் 18.11.2018 அன்று நடைபெற்ற யூடோ தற்காப்புக்கலை தரங்கணிப்பு போட்டியில் வவுனியா சார்பாக கலந்துகொண்ட அகில இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் வெற்றிபெற்று 6 என்ற தகுதிச் சான்றிதழை பெற்றுள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது அகில இலங்கை யூடோ சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.பஸ்நாயக்க மற்றும் யூடோ தொழில்நுட்பத் தலைவர் கெ.எச்.எஸ்.கே.கப்புஆராட்சி ஆகியோர் நடுவர்களாக செயற்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ்களை வழங்கியிருந்தனர்.

வடக்கு மாகாண ரீதியில் யூடோ தற்காப்புக்கலையை பயிற்றுவித்துவரும் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமாரின் தலைமையில் பங்குபற்றிய மாணவர்களில் 40 மாணவர்கள் யூடோ தகுதிச் சான்றிதழ்களை பெற்றிருந்த போதும் கெவின் மிகக்குறைந்த வயதில் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவனின் சாதனையை பாராட்டு முகமாக அவர் கல்விகற்ற அகில இலங்கை தமிழ் கலவன் பாடசாலையின் புலைமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் 30.11.2018 அன்று ஆர்.கே.கெவின் வவுனியா கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜாவினால் சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.