பாதி தலை வெளியே வந்த நிலையில் பரிதாபமாக பலியான தாய், குழந்தை : கண்ணீர் விட்டு கதறும் கணவன்!!

316

 

கண்ணீர் விட்டு கதறும் கணவன்

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால் முதல் பிரசவத்திலே தாயும், குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அருகே பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்வர்கள் ராஜ்- காஞ்சனா (21) தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் காஞ்சனாவிற்கு லேசான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் விஜயசித்ரா, முழுமையான வலி வரும் வரை மருத்துவமனையிலே இருக்குமாறு கூறியுள்ளார். அதன்பேரில் மருத்துவமனையில் இருந்த காஞ்சனாவிற்கு வலி அதிகரித்துள்ளது.

ஆனால் அந்த சமயம் மருத்துவர் விஜயசித்ரா பணிநேரம் முடிந்து வெளியில் சென்றுள்ளார். பணியில் இருந்த செவிலியர் சுகன்யா, காஞ்சனாவிற்கு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். அப்போது குழந்தையின் தலை பாதி வெளியே வந்த நிலையில், எந்த அசைவும் இன்றி நின்றுவிட்டது.

உதவிக்கு வேறு யாரும் இல்லாத காரணத்தால் பதறிப்போன சுகன்யா, காஞ்சனாவை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். ஆபத்தான நிலையில் காஞ்சனாவை அங்கிருந்த உறவினர்கள் வேறு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

அங்கும் மருத்துவர் இல்லாத காரணத்தால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் குழந்தையும், தாயும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குழந்தையும், காஞ்சனாவும் இறப்பதற்கு மருத்துவ நிர்வாகமே காரணம் என கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்பேரில் தற்போது சம்மந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அறிக்கை வந்ததும் அவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கைக்கு மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறியுள்ளார்.