நடிகை சமந்தாவுக்கு மீண்டும் தோல்நோய் பாதிப்பு : படப்பிடிப்பு ரத்து!!

249

Samanthaநடிகை சமந்தா கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திடீர் என்று தோல் நோயினால் பாதிக்கப்பட்டார். அவருடைய முகத்திலும், உடம்பிலும் சிவப்பு புள்ளிகள் தோன்றியதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவர் மணிரத்னத்தின் கடல் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

தோல் நோய் பாதிப்பு காரணமாக சமந்தா அந்த பட வாய்ப்பை இழந்தார். அவருக்கு பதில் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நடித்தார். இதேபோல் ஷங்கரின் நண்பன் படத்துக்கும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். தோல் நோய் பாதிப்பு காரணமாக அந்த படத்திலும் அவரால் நடிக்க முடியாமல் போனது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபின் சமந்தா குணம் அடைந்தார். மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். லிங்குசாமி இயக்க அவருடைய தம்பி சுபாஷ்சந்திரபோஸ் தயாரிக்கும் புதிய படத்தில், சூர்யா ஜோடியாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 10 நாட்கள் நடந்தது.

சூர்யா-சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில், சமந்தாவுக்கு மீண்டும் தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அவருடைய முகம் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றின. உடம்பிலும் அதுபோல் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டன. இதனால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சூர்யா, லிங்குசாமி, மற்றும் படப்பிடிப்பு குழுவினர் சென்னை திரும்பினார்கள். சமந்தா இல்லாத காட்சிகளை டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். சமந்தாவுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சக்தி வாய்ந்த விளக்கு வெளிச்சம்தான் காரணம் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்தார்கள்.