பொன்விழா காணும் மணிவண்ணன் படங்கள்… ஒரு சிறப்புப் பார்வை!

433

mani.

மணிவண்ணன் எண்பதுகளில் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர். ஆனால் இன்றைய தலைமுறை அவரை வெறும் நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறது. அந்த நினைப்பை உடைக்க 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வருகிறது அமைதிப் படை 2. படம் பார்த்த அத்தனை பேருமே மணிவண்ணனைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் நையாண்டிக்கு புதிய இலக்கணமாக இந்தப் படம் வரவிருக்கிறது.

50வது படம் ..

மணிவண்ணனின் பொன்விழாப் படம் என்ற முத்திரையோடு வருகிறது அமைதிப் படை 2. இந்தப் படத்தில் சத்யராஜ், சீமான், ரகுவண்ணனுடன், மணிவண்ணன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அமைதிப்படை முதல் பாகத்தில் வில்லன் சத்யராஜ் இறந்துவிடுவதாக படம் முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்தப் பாத்திரம் உயிரோடு இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் இந்த இரண்டாம் பாகம்.

கோபுரங்கள் சாய்வதில்லை..

50 படங்களை இயக்கிய மணிவண்ணனின் முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. அதற்கு முன் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் போன்ற படங்களில் பணியாற்றியவர். பாக்யராஜுக்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு பிடித்த வசனகர்த்தாவாக மணிவண்ணன் திகழ்ந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை கார்த்திக் வர்ணிக்கும் ஒரு காட்சியில் மணிவண்ணன் வசனங்கள் அத்தனை அழகாக அமைந்திருக்கும்.

வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்..

மணிவண்ணனின் வில்லன்கள் அலாதியானவர்கள். வில்லன்களில் இத்தனை வித்தியாசம் காட்ட முடியுமா என்பதை இவர் படங்களில்தான் பார்க்க முடியும். அதில் ஒன்று வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன். அன்றைக்கு இந்தப் படம் பெரிதாக போகாவிட்டாலும், பார்த்து ரசிக்கும் படமாக அமைந்தது.

12 நாட்களில் நூறாவது நாள்..

மணிவண்ணனை சிகரத்தில் வைத்த படம் என்றால் அது நூறாவது நாள். மிகச் சொற்ப செலவில், மிகக் குறைந்த நாட்களில்… 12 நாட்களில் இந்தப் படத்தை மணிவண்ணன் எடுத்திருந்தார். இதை அன்றைக்கு இளையராஜாவிடம் சொன்னபோது அவரால் நம்பவே முடியவில்லையாம். என்னய்யா சொல்ற12 நாளில் ஒரு படமா சரி படத்தைக் காட்டு என்றாராம்.

நானும் ஏதாவது செய்யணுமே..

இளையராஜா படத்தைப் பார்த்ததும் பிரமாதம், அசத்தியிருக்கேய்யா இதுக்கு நானும் ஏதாவது செய்யணுமே என்றவர், இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத அளவு மிகச் சிறப்பாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்தாராம். படத்தில் மூன்று பாடல்கள்தான். இந்தப் படத்துல அதிகமா பாட்டு வச்சா அந்த க்ரிப் குறைஞ்சிடும். இதுவே போதும். பின்னணி இசைதான் இந்தப் படத்துக்கு ஹைலைட்டா இருக்கணும் என்றாராம் இளையராஜா.

விடிஞ்சா கல்யாணம்..

பாலைவன ரோஜாக்கள் இவர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் வெளியான படங்கள் பாலைவன ரோஜாக்கள் மற்றும் விடிஞ்சா கல்யாணம். இரண்டுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. இரண்டிலுமே சத்யராஜ்தான் ஹீரோ. இதையெல்லாம் இன்றைக்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

இனி ஒரு சுதந்திரம்..

மணிவண்ணன் கிட்டத்தட்ட தனது லட்சியப் படம் என்று அறிவித்து எடுத்தது இனி ஒரு சுதந்திரம். சிவகுமார்தான் ஹீரோ. மிகச் சிறப்பாக வந்திருந்தது. ஆனால் பாராட்டுகள் குவிந்த அளவுக்கு வசூல் குவியவில்லை. அந்த வருத்தம் இன்னும் அவருக்கு உள்ளது.

வாழ்க்கைச் சக்கரம்..

இனி ஒரு சுதந்திரத்துக்குப் பிறகு மணிவண்ணன் இயக்கிய தீர்த்தக் கரையினிலே, ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் நன்றாக ஓடின. ஆனால் அதற்கடுத்த சில படங்கள் அவருக்கு தோல்வியைத் தந்தன. அப்போதுதான் திருப்பூர் மணிக்காக வாழ்க்கைச் சக்கரம் என்ற படத்தை எடுத்தார். மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி மூவருக்குமே அந்தப் படம் நல்ல பிரேக் ஆக அமைந்தது.

அமைதிப்படை..

மணிவண்ணன் மிகப் பெரிய வெற்றிப் படம் என்றால் அது அமைதிப்படைதான். தரம், வசூல் என அனைத்திலுமே அந்தப் படம் சிறப்பாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தனர். அங்கும் வெற்றியைக் குவித்தது அமைதிப்படை.

ஆண்டான் அடிமை..

மணிவண்ணனின் 49வது படம் இது. அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இயக்குவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் நடிகராக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 2002ல் மணிவண்ணன் இல்லாத தமிழ்ப் படமே இல்லை எனும் அளவுக்கு எல்லாப் படங்களிலும் காமெடியன், வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கலக்கினார்.

அதிக வெற்றிப் படங்கள்..

ஒரு இயக்குநராக அதிக வெற்றிப் படங்கள் தந்த பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. அதேபோல ராம நாராயணனுக்குப் பிறகு ஒரு ஆண்டில் அதிக படங்களை இயக்கியவரும் மணிவண்ணன்தான்.

இளையராஜாவுடன்..

மணிவண்ணன் இயக்கியுள்ள 50 படங்களில் முக்கால்வாசி இளையராஜா இசையமைத்தவைதான். இவர் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும். இங்கேயும் ஒரு கங்கை, முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, தீர்த்தக் கரையினிலே, அம்பிகை நேரில் வந்தால் போன்ற படங்களில் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.

அடுத்து..

அமைதிப் படை 2-க்குப் பிறகு, தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தை இயக்கும் மணிவண்ணன், அதைத் தொடர்ந்து இரண்டு புதிய படங்களை இயக்கும் திட்டத்தில் இருந்தார் . அனைத்துக்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர் . இதில் ஒன்று அவர் ஏற்கெனவே இயக்கி வெற்றி கண்ட படத்தின் இரண்டாம் பாகம். ஆனால் அறிவிப்பை பின்னர் வெளியிடலாம் என ரகசியமாக வைத்திருந்தார்.

ரஜனியுடன்..

சூப்பர் ஸ்டார் ரஜனியின் கொடிபறக்குது படத்தில்தான் முதன் முதலாக நடித்தார் மணிவண்ணன். அதன் பிறகு, ரஜனியின் நெருங்கிய நண்பராகிவிட்டார். ரஜனி நடித்த பிரமாண்ட வெற்றிப் படங்களில் நிச்சயம் மணிவண்ணன் இருப்பார். படையப்பா, சிவாஜி போன்ற படங்களில் ரஜனியே விரும்பி அழைத்து அந்த வேடங்களைச் செய்யச் சொன்னாராம். அதுமட்டுமல்ல, மணிவண்ணனின் நய்யாண்டி நடிப்புக்கு தான் மிகப் பெரிய ரசிகர் என்று மேடையிலேயே அறிவித்தார் ரஜனி.