ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுடான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இலங்கை அணிக்கு மிக சவாலானதாக அமையும் என இலங்கை அணியின் பயிற்றுநரான கிரஹம் போர்ட் கூறியுள்ளார்.
துரதிஷ்டவசமாக, பாகிஸ்தான் போன்று நாம் அதிக போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த 6 மாத காலத்தில் அவர்கள் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் காலநிலை மற்றும் ஏனைய காரணங்களால் அதிக போட்டிகளில் விளையாடுவதற்கு எமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த வகையில் இச்சுற்றுப்போட்டிகளில் பாகிஸ்தான் அணி சாதகமான தன்மைகளைக் கொண்டுள்ளது என கிரஹம் போர்ட் கூறினார்.
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 20-20 போட்டிகள் எதிர்வரும் 11 ஆம், 13 ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளன. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி சார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.
டிசம்பர் 31 ஆம் திகதி முதல் 3 டெஸ்ட் போட்டிகள் டுபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் அணி நேற்றுமுன்தினம் வரை தென்னாபிரிக்காவிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தென்னாபிரிக்காவுடன் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த 8 மாதங்களில் பாகிஸ்தான் அணி 4 டெஸ்ட் போட்டிகள், 23 ஒருநாள் சர்வதேச போட்டிகள் 8 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதே காலப்பகுதியில் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 5 இருபது போட்டிகளிலும் மாத்திரமே விளையாடியுள்ளது.
இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டி சுமார் 10 மாத காலத்தின்பின் இலங்கை அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
இலங்கை அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறுதியாக 2011 ஆம் ஆண்டு விளையாடியது. அத்தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 விகிதத்தில் டெஸ்ட் தொடரை வென்றது. ஒருநாள் தொடரில் 4-1 விகிதத்திலும் 20-20 போட்டியிலும் பாகிஸ்தான் அணியே வென்றது.





