வவுனியாவில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம்!!

1007

வவுனியாவில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி ஜனநாயகத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (11.12) முன்னெடுத்திருந்தனர்.

பாதிப்பிற்கு மீள் கட்டுமானமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள் கட்டுமானமா? என்ற பதாதையை தாங்கியவாறு வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையத்திலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் பிரதம கணக்காளர் எஸ்.பாலகுமாரனிடம், மாவட்ட செயலாளரிடம் கையளிக்குமாறு மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

வீட்டுத்திட்டம், காணிப்பிரச்சனை, வாழ்வாதாரம் மற்றும் நிவாரணம் வழங்கப்படாமை போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி பாரதிபுரம் விக்ஸ் கிராமம், ஈஸ்வரிபுரம் மற்றும் கந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நல்லாட்சி ஏற்பட்டு மூன்றரை வருடங்களாகியும் எமக்கு தீர்வு கிடைக்கவில்லை, காணிகளுக்கு உரிமை மறுப்பது மனித உரிமை மீறல், வழங்கு வழங்கு காணிகளை வழங்கு, நல்லாட்சியை ஏற்படுத்திய தமிழ் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.