வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் செயற்பாட்டால் மக்கள் பாதிப்பு!!

1096

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் திட்டமிடப்படாத செயற்பாட்டால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோணிக்கல் மற்றும் அதனையண்டிய கிராம மக்களும், மீன் வியாபாரிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினால் தோணிக்கல் பகுதியில் ஓரு பொதுச்சந்தை அமைக்கப்பட்டது. இச் சந்தை மக்கள் நடமாட்டம் குறைந்த எல்லைப் பகுதியில் காணப்பட்டமையால் மக்கள் செல்லாமையால் திறந்து சில மாதங்களுக்குள்ளேயே பூட்டப்பட்டது.

தற்போது குறித்த பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) புதிய சந்தையை இயக்குவதற்காக குறித்த சந்தையில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்த மீன் விற்பனை நிலையம் மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதுடன் இவ் வியாபார நிலையங்களின் அனுமதியையும் ரத்து செய்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டிருந்த வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதுடன், பண்டாரிகுளம், மேட்டுத்தெரு, லக்ஸ்சபானா வீதி, தோணிக்கல், ஆலடி வீதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நூறு ரூபாய்க்கு மீன் வாங்க இருநூறு ரூபாய் செலவழித்து சந்தை அமைந்துள்ள தூரத்திற்கு செல்லவேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

6 தொடக்கம் 16 வருடங்கள் வரை குறித்த கிராமங்களில் மீன் மற்றும் கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்ட வியாபாரிகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் தொழிலை இழந்துள்ளதுடன் புதிய சந்தையிலும் தமக்கான இடம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் பிரதேச சபை தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பயனளிக்கவில்லை.

இதேவேளை குறித்த சந்தை குறித்த தவிசாளர் கடந்த முறை உபதவிசாளராக இருந்த போதே கட்டப்பட்டு பயன்பாடின்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.