பதவி விலகுகிறாரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன?

568

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை கலைத்ததாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலானது செல்லுபடியற்றது என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டத்துக்கு முரணானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பிற்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினர் கொண்டாட்டத்தி்ல் ஈடுபட்டுவருகின்றனர்.

வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் எடுத்த முடிவானது தவறானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் மதிப்பளித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார். இனியாவது மைத்திரிபால சிறிசேன சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், தவறானவர்களின் கருத்துக்களை அவர் கேட்க வேண்டாம் என்றும் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் விபரத்தினை சற்று நோக்கலாம், நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் இடம்பெற்றது.

இம்மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முரணானது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர்களினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், ஜனாதிபதி அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்பட்டுள்ளார். நாட்டில் அரசியல் அமைப்புக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட்டால் அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு அவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.

இது தொடர்பான தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்தன. இன்றைய நீதிமன்றத் தீரப்பும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது, ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் தன்னிச்சையாக கலைக்க முடியாது என்று.

ஆக. ஜனாதிபதி அரசியல் அமைப்பை அவமதித்து, அதனை மீறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக எதிர் கட்சிகள் குற்றப்பிரேணை கொண்டுவர வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதுவாயினும், மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றால் தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவேன் என்று மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-