ஐந்தாவது தடவையாகவும் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க?

311

உச்ச நீதிமன்றத் தீரப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் தொடர்ந்தும் சட்ட ரீதியாக இயங்கும் நிலைக்கு வந்திருக்கிறது.

தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நாடாளுமன்றம் சட்ட ரீதியற்றது என்று மகிந்த ராஜபக்ச அணியினர் குற்றம்சாட்டி வந்தனர். எனினும், இன்றைய தினம் உச்ச நீதிமன்றமானது தீர்க்கமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமையானது சட்ட ரீதியானது அல்ல என்றும், அது அரசியல் அமைப்புக்கு முரணானது என்றும் குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தன்னுடைய பெரும்பான்மையை ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். ஆக, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவினை தற்போது ரணில் விக்ரமசிங்க கொண்டிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவுடன், ரணில் விக்ரமசிங்க 117 என்ற பெரும்பான்மைய நாடாளுமன்றத்தில் காட்டியிருக்கிறார். இந்நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

யார் பெரும்பான்மையை கொண்டிருக்கிறாரோ அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக மைத்திரிபால சிறிசேன நியமிக்க வேண்டும். அவ்வாறு மீண்டும் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டால் ஐந்தாவது தடவையும் பிரதமர் என்னும் பதவியை ரணில் பெறுகிறார்.

குறிப்பாக, 1993–1994 ஆம் ஆண்டு காலத்திலும், 2001–2004 ஆண்டு சந்திரிகா அம்மையார் காலத்திலும் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, 2015ம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ரணிலை பிரதமராக்கினார்.

பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கூட்டாட்சி அமைந்த போதும் ரணில் பிரதமராக பதவியை தக்க வைத்துக் கொண்டார் நான்காவது முறையாக.

இப்போது நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின்படியும், நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய ஆதரவின்படியும், ரணிலுக்கு பிரதமராகும் வாய்ப்பு அதிகமாகியிருக்கிறது. அதாவது ஐந்தாவது தடவையாகவும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், ரணிலை பிரதமர் பதவியில் அமர்த்தமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.