விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று மன்மோகன் சிங் யாழிற்கு விஜயம் செய்தால் வரவேற்பேன் : பிரதமர்!!

585

D_M_Jayarathnaவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனின் அழைப்புக்கு அமைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தால் அதனை வரவேற்பதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஏனையோர் கூறுவதை கேட்பதற்கு பதிலாக அவர் நேரில் யாழ்ப்பாணத்திற்கு சென்று நிலைமைகளை பார்த்து அறிந்து கொண்டால் நல்லது.

வடக்கு மாகாண முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு விடுத்துள்ள அழைப்பு குறித்து அரசாங்கம் இன்னும் அதிகாரபூர்வமான நிலைப்பாட்டை வெளியிடவில்லை. எனினும் இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் இதுவரை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை. இந்திய பிரதமர் இலங்கை வருவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்த அல்ல. அவர் அரசாங்கத்துடனும் பேசுவார்.

அதேவேளை வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமரின் கருத்துக்கள் தேர்தலில் வாக்குகளை எதிர்பார்த்து வெளியிடப்பட்ட கருத்துக்கள்.

வாக்குகளை பெற வேண்டுமானால் நாங்களும் ஏதாவது ஆதரவை வழங்கி வாக்குகளை பெறுவது போன்றுதான் பிரித்தானிய பிரதமரும் செய்துள்ளார். பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் வாக்குகளை பெறவே அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்றார்.