தென்னாபிரிக்கவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஒரு ஓட்டம் எடுத்ததும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி என்ற சாதனை இந்திய அணி படைக்கவுள்ளது.
தற்போது இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 881 ஓட்டங்களுடன் சமநிலையில் உள்ளன. இந்திய அணி 841 ஆட்டங்களிலும், அவுஸ்திரேலிய அணி 825 ஆட்டங்களிலும் இந்த ஓட்ட எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இருப்பினும் இந்திய அணியை விட அவுஸ்திரேலிய அணியின் வெற்றி விகிதம் அதிகமாக உள்ளது. அவுஸ்திரேலியா 505 ஆட்டங்களிலும், இந்தியா 423 ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
அதிக ஓட்டங்கள் எடுத்த அணிகளில், பாகிஸ்தான் அணி 1,71,982 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும், 1,46,365 ஓட்டங்களுடன் இலங்கை அணி நான்காவது இடத்திலும் உள்ளன. 1,45,260 ஓட்டங்களை எடுத்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்ற பின், நியூஸிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. எனவே, இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடர் முடிந்த பின் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணி பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.





