வவுனியா சிறுவர் துஸ்பிரயோக வழக்கில் கல்யாணதிஸ்ஸ தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு!! (படங்கள்)

383

வவுனியா – அட்டமஸ்கட பிரதேசத்தில் அமைந்திருந்த சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு பல்வேறு துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற நிலையில் அதன் காப்பாளர் கல்யாணதிஸ்ஸ தேரர் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீதான வழக்கு இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி எஸ்.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா அட்டமஸ்கட பகுதியில் 2010 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தில் விகாராதிபதியினால் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் வவுனியா மாவட்ட நீதிமன்றில் கடந்த 6.11.2013 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து விகாரதிபதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 19 ஆம் திகதி மீண்டும் அவ் வழங்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந் நிலையில் கடந்த 26 ஆம் திகதி மேலும் ஒரு சிறுவன் தன்னை சிறுவர் இல்லத்தில் இருந்த சிலர் தடிகளால் தாக்கியதாகவும் இதன் காரணமாக பலகையில் இருந்த ஆணி தனக்கு காயத்தை ஏற்படுத்தியமையால் தனக்கு தோல் நோய் ஏற்பட்டுள்ளதாக வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்தில் முறைப்பாட்டை செய்திருந்ததுடன் வவுனியா பொலிஸிலும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

அதனையடுத்து மேலும் 5 சிறுவர்கள் நேற்று தமது பெற்றோருடன் வவுனியா சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் நிலையத்திற்கு வருகை தந்து தமது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இவ் முறைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை பெற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி தொடர்ச்சியாக விகாரதிபதிக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்து வருவதனாலும் முறைப்பாட்டாளர்களின் தடயங்கள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை இவ் விசாரணை இடம்பெற்ற போது விகாராதிபதிக்கு ஆதரவான ஒரு குழுவினர் நீதிமன்றம் முன் கூடி இருந்தமையால் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.

1 2