வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!!

329

வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உறுப்பினர்களால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையில் இன்று(21.12.2018) இடம்பெற்ற அமர்வின் போது வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது கூட்டமைப்பு உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் வட்டார ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதியில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், தவிசாளருக்கு ஆதரவளித்த உறுப்பினர்களின் வட்டாரங்களுக்கு அதிக நிதி ஓதுக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையில் உறுப்பினர்களுக்கு நிதி ஓதுக்காது ஒவ்வொரு வட்டாரத்தின் தேவைக்கேற்ப சரியாக நிதியை பாதீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்களான சு.காண்டீபன், ரி.கே.இராஜலிங்கம், க.சுமந்திரன், ந.சேனாதிராஜா, எஸ்.ரூபன் ஆகியோரும் இக் கருத்தை வரவேற்று தமது வட்டாரங்களுக்கும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாகவும், வருமானம் கூடிய வட்டாரங்களுக்கு குறைவான நிதியும், வருமானம் குறைந்த வட்டாரங்களுக்கு கூடிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான பாரி மற்றம் லரீப் தமது வட்டாரங்களில் இரு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிப்பதாகவும் அங்குள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் தெரிவித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் செபநேசராணி தமது வட்டாரத்தில் அதிக உறுப்பினர்கள் உள்ளதால் நிதி ஒதுக்கீடு சரி எனத் தெரிவித்தார். இதனையடுத்து சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இறுதியில் நகரசபை பாதீடு கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக தவிசாளரால் பொது வேலைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளிலிருந்து மீளப்பெற்று வட்டார அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டது.

இதனையடுத்து வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.