வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய விவகாரம் : தொல்பொருள் திணைக்களம் மீது மக்கள் அதிருப்தி!!

697

 

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம்

வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயத்தில் உள்ள தொல்பொருள் எச்சங்களை புனரமைப்பதற்காக தொல்பொருள் திணைக்களம் பலமுறை முயற்சித்தநிலையில் மக்களின் எதிர்ப்பினால் அதில் தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 17 ம் திகதி புனரமைப்பு பணிகளுக்காக சென்ற திணைக்களத்தினருடன் மக்கள் முரண்பட்டிருந்தன்னர்.

எனினும் இருக்கின்ற பகுதிகளில் ஒரு செங்கற்கள் கூட புதிதாக வைக்கபடாமல் தற்போது இருப்பதனை போலவே புனரமைக்கபடும் என்று எமக்கு எழுத்து மூலம் உறுதிமொழி தந்தால் புனரமைக்க அனுமதிக்கின்றோம் என்று பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தால் கூறப்பட்டது.

அதன்பின்னர் அதற்கான எழுத்துமூலமான கடிதத்தை வழங்குவதாக தெரிவித்துவிட்டு தொல்பொருள் திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றனர். அதனடிப்படையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிந்தது.

அதற்கமைவாக தொல்பொருள் நிலையபாதுகாப்பு சம்பந்தமாக மக்களைதெளிவுபடுத்தலும் அதற்கான காரணங்களை வெளிப்படுத்தலும் என்ற தலைப்பில் தொல்பொருள் திணைக்களத்தின் வன்னி மாவட்டங்களிற்கான ஊதவிப் பணிப்பாளர் பியதிலக பண்டா என்பவரால் குறித்த கடிதம் ஆலய நிர்வாகத்தினருக்கு கடந்த 18ம் திகதி வழங்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

குறித்த தொல்பொருள் எச்சங்களைக் கொண்ட பகுதி பாதுகாப்பு செய்வதற்காக 2018 திட்ட நடவடிக்கை மூலம் தொல்பொருள் திணைக்களத்தால் நிதி ஒதுக்கபட்டுள்ளது. 1970ம் ஆண்டு முதல் குறித்த பகுதியில் தொல்பொருட்பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனினும் சில வாரங்களிற்கு முன்னர் குறித்த பகுதியை புனரமைக்க முற்பட்டபோது அப்பகுதியில் காணப்படும் ஆலயத்தின் நிர்வாகம், பிரதேச மக்கள் எதிர்பினை தெரிவித்துவந்தனர். கடந்த 17ம் திகதி இவ்விடத்தை புனரமைப்பது தொடர்பாக தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அதற்கமைவாக குறித்த இடத்தின் பாதுகாப்பு தொடர்பாக தமக்கு அறியதரப்படவில்லை என்று அவர்களால் தெரிவிக்கபட்டதுடன், அது தொடர்பான தகவல்களை வழங்கிய பின்னர் அதனை புனரமைக்குமாறு கூறியிருந்தனர்.

பாதுகாப்பு (புனரமைப்பு) என்பது மாசடைதல் மற்றும் அழிவடைந்துபோகக்கூடிய கலாசார நிர்மானத்தின் ஆயள் காலத்தை முடியுமான அளவு அதிகரிப்பதற்கான நடவடிக்கையாகும்.

அதன்படி சமளங்குளத்தில் அமைந்துள்ள தூபி மற்றும் மூலஸ்தான கட்டடம் இதுவரை சேதமடைந்து காணப்படுவதனால் அழிவடைந்துள்ளது. எனவே அவற்றின் ஆயள்காலத்தை அதிகரித்து பாதுகாக்கவே இச்செயற்பாடு மேற்கொள்ளபடுகின்றது.

இதன்போது மேற்கொள்ளபடும் நடவடிக்கைகளாக தூபி மற்றும் மூலஸ்தானத்தில் அழிவடைந்துள்ள
செங்கற்களை மீண்டும் புணரமைத்தல், சேதமடைந்த சீமந்து அடைப்புகளை அகற்றி மீண்டும் புதிய சீமந்தை பூசி அதன் சக்தியை அதிகரித்தல். தூபியின் அமைப்பபை முழுமைப்படுத்தல், மூன்று வரிகள் அல்லது 9 அங்குலம் உயர்துதல், சந்துகளிற்கு பழைய முறைப்படி நிறப்பூச்சிடுதல் போன்ற பணிகள் இடம்பெறவுள்ளதாக குறித்த கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வழங்கபட்ட அறிக்கை சிங்கள தமிழ் மொழிகளில் காணப்பட்டாலும் சொற்பிரயோகங்களில் ஏதேனும் வேறுபாடுகள் ஏற்படின் சிங்கள மொழியிலான சொற்பிரயோகத்திற்கே முன்னுரிமை அளிக்கபடும் என்று அவர்களால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி உள்ளதாக நிர்வாகம் தெரிவிப்பு… குறித்த கடிதம் தொடர்பாக தமக்கு அதிருப்தி உள்ளதாக ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தூபியை முழுமைப்படுத்தல்,10 அங்குலம் வரை உயர்த்துதல் என்பன முறையற்ற செயற்பாடு. அதனை நாம் ஏற்கமாட்டோம். அத்துடன் சொற்பிரயோகங்களில் வேறுபாடுகள் ஏற்படின் சிங்கள மொழிக்கே முன்னுரிமை என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இரு மொழிகளிலும் குறித்த கடிதம் எமக்கு தரப்பட்டுள்ளது. எனவே சிங்கள மொழியில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது தொடர்பாக நாம் ஆராயவேண்டியுள்ளது.அதனை ஆராய்ந்த பின்னர் குறித்த கடிதத்தில் உள்ள அதிருப்திகள் தொடர்பாக தொல்பொருட் திணைக்களத்திற்கு தெரியப்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.