வவுனியா நகர சபையில் சர்ச்சை : உறுப்பினரை வெளியேற்றுவேன் என எச்சரித்த தவிசாளர்!!

345

எழு நீ நிகழ்வு தொடர்பில் கேள்வி எழுப்பிய நகரசபை உறுப்பினரை சபையை விட்டு வெளியேற்ற வேண்டி வரும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் எச்சரித்தார்.

வவுனியா நகரசபையால் நடாத்தப்பட்ட எழு நீ விழா தொடர்பாக நேற்றைய சபை அமர்விலும் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டிருந்தது.

நகர சபையால் நடாத்தப்பட்ட எழு நீ விழா தொடர்பாக கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் செந்தில்ரூபனால் தவிசாளரிடம் விளக்கம் கோரப்பட்டது.

அத்துடன் விருதிற்காக தெரிவு செய்யபட்டவர்களிற்கு வழங்கபட்ட சான்றிதழில் நகரசபையின் செயலாளரது பெயர் பொறிக்கபட்டு அது பின்னர் மறைக்கபட்டுள்ளதுடன் அவ்விடத்தில் வேறு ஒருவர் கையொப்பமிடடுள்ளார்.

இதற்கான விளக்கத்தை தலைவர் தர வேண்டும் என தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை தலைவர், எழுநீ முற்றத்திலிருந்து நகரசபையின் 3 உறுப்பினர்கள் விலகியமையால் நிகழ்வை தாங்களே பொறுப்பேற்று நடாத்துவதாக எழு நீ முற்றத்தினர் கூறினர்.

எழு நீ முற்றம் நடாத்திய நிகழ்வானமையால் நகரசபையின் செயலாளர் கையொப்பம் வைக்காமல் முற்றத்தின் செயலாளர் வைத்திருந்தார். அதற்கு காரணமும் நீங்களே என்று தவிசாளர் தெரிவித்தார்.

நகரசபையின் பெயரில் வேறு அமைப்பு இவ்வாறு நிகழ்வை செய்யலாமா என்று செந்தில்ரூபன் கேள்வி எழுப்பினார்.

இதனால் தவிசாளருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. நிகழ்சிநிரலில் இருக்கின்ற விடயங்களை மாத்திரம் கதைக்குமாறு தவிசாளர் தெரிவித்தார்.

இந்த விடயமும் இருப்பதாக தெரிவித்து உறுப்பினர் செந்தில்ரூபன் கதைத்து கொண்டிருந்தார். இதன்போது இனிமேல் கதைத்தால் உங்களை சபையை விட்டு வெளியேற்ற வேண்டிவரும் என்று தவிசாளர் தெரிவித்தார். இதனால் குழப்பம் நீடித்தது.

இதனையடுத்து மற்றுமொரு உறுப்பினர் இந் நிகழ்வு நகரசபை நடத்தவில்லையா என கேட்டபோது இல்லை நகரசபையே நடத்தியது என தவிசாளர் கூறினார்.

இதன்போது நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராஜா நகரசபை எழு நீ விழாவை நடத்தினால் கணக்கறிக்கையை சபையிடம் ஒப்படையுங்கள் என தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தலைவர் அவ்வாறு தெரிவித்தால் பணம் செலுத்த வேண்டி தேவைப்பட்டால் செலத்தவும் வேண்டும் என தெரிவித்தார்.

எனினும் இதன் போது உரையாற்றிய சேனாதிராஜா குறித்த நிகழ்வுக்கான கணக்கறிக்கை தரப்பட வேண்டும். நகரசபை தலைவரின் அறையில் வைத்து ஒருவர் நிகழ்வுக்கு 2 இலட்சம் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது என தெரிவித்தார். எனினும் தவிசாளர் அதனை மறுத்துரைத்திருந்தார்.

அத்துடன் நிகழ்வு நடைபெற்றமைக்கான அழைப்பிதழ்கூட தமக்கு வழங்கபடவில்லை என்று உறுப்பினரான நா.சேனாதிராஜா தெரிவித்தார்.

இதற்கு நீங்கள் நிகழ்வை புறக்கணிப்போம் என்று கூறியமையால் அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று தவிசாளர் பதிலளித்தார். புறக்கணித்தாலும் உறுப்பினர் என்ற வகையில் நீங்கள் அனுப்பியிருக்க வேண்டும்.

முதலமைச்சரை விருந்தினராக அழைத்தமையினாலேயே இங்கு குழப்பம் வந்தது. அவர் வருகை தந்து அரசியல் பேசி நிகழ்வை அரசியலாக்கி சென்றுள்ளார் என சேனாதிராஜா தெரிவித்ததுடன், நிகழ்வின் வரவுசெலவு திட்டம்தொடர்பாக எமக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறிய நிலையில் அது தொடர்பாக அடுத்த கூட்டதில் கூறுவதாக தவிசாளரால் தெரிவிக்கப்பட்டது.