வவுனியா நகரசபையில் குழப்பம் : புளொட் அமைப்புக்கு சவால் விடுத்த ஈபிடிபி உறுப்பினர்!!

356

வீட்டை விட்டு வெளியில் வந்து வென்று காட்டுங்கள் என புளொட் அமைப்புக்கு வவுனியா நகரசபையைச் சேர்ந்த ஈபிடிபி உறுப்பினர் பாலபிரசன்னா சவால் விடுத்துள்ளார்.

வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நடந்த அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நகரசபையின் பாதீட்டில் சில வட்டாரங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வட்டார ரீதியில் பாகுபாடுகள் காட்டப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பு உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட தமிழர் விடுதலைக் கூட்டனி உறுப்பினர் செபநேசராணி தமது பகுதியான தேக்கவத்தை பகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி சரியானது எனவும் அதில் மாற்றம் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்ததுடன், நாங்கள் பெண்கள் எங்களை வந்து மக்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நீங்களும் பெண்களை நிறுத்திப் பார்த்தால் தான் தெரியும் எனத் தெரிவித்தார்.

பதிலளித்த கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், நீங்கள் அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம் என எடுத்து போனஸ்சில் வந்தனீங்கள். உங்களையே மக்கள் கேட்கின்றார்கள் என்றால் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெல்ல வைத்த மக்கள் தமது பகுதிக்கு நிதி காணாது எனக் கேட்கிறார்கள் என காராசாரமாக தெரிவித்தார்.

இதன்போது வட்டாரத்தில் வென்ற உறுப்பினர்கள், போனஸ் உறுப்பினர்கள் என சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், போனஸ்சில் வந்த உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஈபிடிபி நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா, நான் ஈபிடிபி கட்சியில் அதன் சின்னத்தில் போட்டியிட்டு போனஸ் உறுப்பினராகவே வந்தேன். கூட்டமைப்பில் போட்டியிட்ட புளொட் உறுப்பினர் சந்திரகுலசிங்கம் அவர்களைக் பார்த்து முடிந்தால் நீங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து உங்களது சின்னத்தில் வென்று காட்டுங்கள் என சவால் விடுத்தார். இதன்போது போனஸ் உறுப்பினர்கள் சிலர் இக்கருத்தை ஆதரித்தனர்.

குறுக்கிட்ட கூட்டமைப்பில் புளொட் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் சு.காண்டீபன் தாம் தனித்து கேட்டும் வெல்வோம். முன்னரும் செய்து காட்டினோம் என வாதிட்டார்.

இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. கூட்டமைப்பின் சு.காண்டீபன், ஐக்கிய தேசியக் கட்சியின் லரீப் மற்றும் தவிசாளர் ஆகியோர் நிலமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு சபையை வழமைக்கு கொண்டு வந்தனர்.